முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் அரசிதழில் வெளியீடு

ஒன்பது முஸ்லிம் அமைச்சர்களினதும் பதவி விலகல் தொடர்பாக அரசிதழ் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசிதழ் நேற்றிரவு அச்சிடப்பட்டதாக, அரசாங்க அச்சகத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துரலியே ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டம், மற்றும் அதையடுத்து எழுந்த அழுத்தங்களை அடுத்து, அரசாங்கத்தில் அங்கம் வகித்த, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதிஅமைச்சர் என ஒன்பது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 3ஆம் நாள் பதவி விலகுவதாக அறிவித்திருந்தனர்.

உருவானது சர்ச்சை

பதவி விலகுவதாக அறிவித்த முஸ்லிம் அமைச்சர்களின் விலகல் கடிதங்கள், இன்னமும் சிறிலங்கா அதிபருக்கு அனுப்பப்படவில்லை என்றும், அவர்கள் தொடர்ந்தும் அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்துவதாகவும், பாதுகாப்பு வசதிகளைப் பெற்றிருப்பதாகவும் நேற்று முன்தினம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதையடுத்து, கொழும்பு அரசியலிலும், நாடாளுமன்றத்திலும் சர்ச்சை எழுந்தது.

ஹக்கீம் விளக்கம்

இந்த சர்ச்சைகளை அடுத்து, நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த, முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஒன்பது முஸ்லிம் அமைச்சர்களும், ஒரு கடிதத்திலேயே ஒப்பமிட்டு தமது பதவி விலகலை அறிவித்திருந்ததாகவும், அது அரசியலமைப்பின்படி செல்லுபடியாகாது என சிறிலங்கா அதிபர் கூறியுள்ளதால், தனித்தனியான கடிதங்களை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.

ரணிலும் ஒப்புதல்

திங்கட்கிழமையன்றே முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகல் கடிதங்களை சமர்ப்பித்து விட்டனர் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

“செவ்வாயன்று அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபருக்கு அதுபற்றி தாம் கூறிய போது, தனித்தனியான விலகல் கடிதங்களை அனுப்ப வேண்டும் என்று கூறினார்.

அதற்கமைய தனித்தனியான விலகல் கடிதங்களைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் கூறியிருந்தார்.

தனித்தனி விலகல் கடிதங்கள்

இந்தநிலையில் நேற்று முன்தினமே, நான்கு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், ஹலீம், கபீர் ஹாசிம் மற்றும் நான்கு இராஜாங்க அமைச்சர்கள், ஒரு பிரதி அமைச்சர் ஆகியோர் பதவி விலகல் கடிதங்களை சிறிலங்கா அதிபருக்கு அனுப்பினர்.

இந்தக் கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் செயலகம் நேற்றுமுன்தினம் மாலையில் அறிவித்திருந்தது.

அரசிதழ் வெளியானது

இதையடுத்தே, நேற்றிரவு ஒன்பது முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பான அரசிதழ் அறிவிப்பு சிறிலங்கா அதிபரினால் வெளியிடப்பட்டிருக்கிறது.

மகாநாயக்கர்களை சந்திக்க திட்டம்

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுமாறு, மகாசங்கத்தினர் விடுத்த கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தநிலையில் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், மகாநாயக்கர்களைச் சந்தித்து தமது நிலைப்பாட்டை விளக்கிக் கூறவுள்ளனர்.

வரும் 11ஆம் நாள் தாங்கள் மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கவுள்ளதாக, பதவி விலகிய அமைச்சர்களில் ஒருவரான ஹலீம் தெரிவித்தார்.

நேற்று ரணில், இன்று மகிந்த

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றிரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேசினர். இன்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளதாகவும் ஹலீம் கூறினார்.

சம்பந்தனையும் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும், கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட மதத் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவதற்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!