சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டம் ரத்து

இன்று நடைபெறவிருந்த சிறிலங்கா அமைச்சரவையின் வாராந்தக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகளை நிறுத்தாவிட்டால், அமைச்சரவைக் கூட்டங்களை புறக்கணிப்பேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வியாழக்கிழமை நடந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் எச்சரித்திருந்தார்.

வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் நிலையில், இன்றைய அமைச்சரவைக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

எனினும், நேற்று அலரி மாளிகையில் அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னதாக நடக்கும் தயார்படுத்தல் கூட்டம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், நேற்று பதில் அமைச்சர்களாகப் பதவியேற்ற மூன்று அமைச்சர்களில் இருவரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், தெரிவுக்குழு விசாரணை தொடர்பாக சிறிலங்கா அதிபர் தெரிவித்து வரும் எதிர்ப்புக் குறித்தே முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமைச்சர்கள் குழுவொன்று விரைவில், சிறிலங்கா அதிபரைச் சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!