குழந்தை பெற்ற அடுத்த அரை மணிநேரத்திலேயே பரீட்சை எழுதிய தாய்

எத்தியோப்பியாவில் ஆண் குழந்தையை பிரசவித்த பெண் ஒருவர் அரை மணி நேரத்துக்கு பின் வைத்தியசாலையில் படுக்கையிலேயே தனது பரீட்சையை எழுதியுள்ளார்.

21 வயதாகும் அல்மாஸ் டெரீஸ் மேற்கு எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர். கர்ப்பிணியாக இருந்தபோது பிரசவம் நடப்பதற்கு முன்னரே பரீட்சைகளை முடித்து விட தீர்மானித்திருந்தார்.

ஆனால் ரமழான் பெருநாள் காரணமாக அவரது உயர்தரப் பரீட்சைகள் தள்ளி வைக்கப்பட்டது.

திங்கட்கிழமையன்று அவருக்கு பரீட்சைகள் நடப்பதற்கு இருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தையைப் பெற்றெடுத்தப் பின் அவர் தனது பரீட்சைகளை எழுதியுள்ளார்.

”கர்ப்பிணியாக இருக்கும்போது படிப்பது ஒன்றும் பிரச்சனையாக இருக்கவில்லை. அடுத்த ஆண்டு வரை நான் தேர்ச்சி பெற காத்திருக்க விரும்பவில்லை” என்றார்.

ஆங்கிலம், அம்ஹாரிக், கணிதம் உள்ளிட்ட பரீட்சைகளை திங்கட்கிழமையன்று வைத்தியசாலையில் எழுதினார். அடுத்த இரண்டு நாட்களில் நடக்கும் பரீட்சைகளை அவர் பரீட்சை மையத்துக்குச் சென்று எழுதவுள்ளார்.

இந்நிலைியில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

”எனக்கு பிரசவம் ஒன்றும் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை ஆகையால் நான் அவசரமாக பரீட்சை எழுத உட்கார்ந்தேன்” என தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் தனது மனைவியை பரீட்சை எழுதுவதற்கு அவர் படித்த பாடசாலையை இணங்கச் செய்ததாக கணவர் தெரிவித்தாதுள்ளார்.

எத்தியோப்பியாவில் உயர்தர பாடசாலை கல்வியை இடையில் கைவிட்டுவிட்டு பின்னர் படிப்பை முடிப்பது அங்குள்ள பாடசாலை மாணவிகளிடம் பரவலாக காணப்படும் விடயம்.

அல்மாஸ் தற்போது கல்லூரியில் சேர்வதற்கான இரண்டு வருட படிப்பை முடிக்க வேண்டும் என விரும்புகிறார் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!