சஹ்ரானின் சகா மில்ஹான் உள்ளிட்ட ஐவர் ஜெத்தாவில் இருந்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்டனர்!

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகளில் முக்கியமான ஐந்து பேர் மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த வேளையில் கைது செய்யப்பட்டு, கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட அயாத்து மொஹமட் அஹமட் மில்ஹான் என்பவரே வவுணத்தீவு பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் கொலையுடன் சம்பந்தப்பட்ட முக்கிய நபர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

‘ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகளில் முக்கியமான ஐவரை மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த வேளையில் கைது செய்ய முடிந்துள்ளது.

முக்கிய நபரான 30 வயதான அயாத்து மொஹமட் அஹமட்மில்ஹான் என்பவராவர். இவர் 45 இன் கீழ் 5 எஸ்.பி.வீதி புதிய காத்தான்குடி 2 என்ற முகவரியைச் சேர்ந்தவர். இந்த மில்ஹான் என்ற நபர் சஹ்ரானுடன் மிகவும் நெருக்கமானவர்.

2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வவுனத்தீவில் வீதி பரிசோதனையில் ஈடுபட்டிருந்த 2 பொலிஸ் கான்ஸ்டபிள்களை கொலை செய்த சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான மொஹமட் மில்ஹான் ஆவார். இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரினதும் மரணம் தொடர்பாக இதற்கு முன்னர் இருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் மொஹமட் சஹ்ரானின் சாரதியும் இருக்கின்றார். மொஹமட் மில்ஹான் இதில் முக்கிய சந்தேக நபர் ஆவார். மத்திய கிழக்கு நாடுகளில் மறைந்திருந்த எனைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட ஏனைய நால்வருள் 30 வயதான மொஹமட் மர்சூப் ரிலான் 522 யு தம்கம் வீதி அம்பாறை, மருதமுனை 3 என்ற முகவரியைச் சேர்ந்தவர்.

மற்றைய சந்தேக நபர் மொஹமட் மொஹைதீன் மொஹமட் சன்வார்சப்தி 44 வயதுடையவர். சஹராஸ் கார்ட்ன் வெல்லம்பிட்டியைச் சேர்ந்தவராவார். 29 வயதான மொஹமட் ஸ்மைல், மொஹமட் இல்ஹாம் கம்புரடி வீதி காத்தான்குடி 01. மற்றைய சந்தேக நபர் 38 வயதானவர். 37 வயதான அபுசாலி அபுபக்கர் இஜ்யாபுர எல்லவௌ கெப்பட்டிக்கொல்லாவை சேர்ந்தவர்.

இவர்கள் ஐவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் உதவி பொலிஸ் அத்தியட்ஷகரின் தலைமையில் பொலிஸ் குழு ஒன்றினால் கைது செய்யப்பட்டு ஜெத்தாவில் இருந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

ஜெத்தாவில் இருந்து யூ.எல்.82 என்ற விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கமைவாக ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் 77 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலும் 27 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுள் நேற்று அழைத்து வரப்பட்ட ஐவரும் அடங்குகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!