ஈரானுக்குச் சென்றார் சிறிலங்கா அதிபர்

எண்ணெய் உள்ளிட்ட வணிக உறவுகளை முன்னேற்றுவதற்கும், முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற சிறிலங்கா அதிபர், ஈரானிய அதிபர் ஹசன் ரொஹானியைச் சந்தித்து, சக்தி துறையில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சு நடத்தவுள்ளார்.

அத்துடன் சிறிலங்காவில் ஈரானின் முதலீடுகளை அதிகரிப்பது பற்றியும் அவர் பேசவுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையில், பொருளாதார மற்றும் வணிக உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்படவுள்ளது.

ஈரான் மீது அனைத்துலக தடைகள் விதிக்கப்படுவதற்கு முன்னர், சிறிலங்காவின் தேயிலையை கொள்வனவு செய்யும் முக்கியமான நாடாக விளங்கியது.

அத்துடன், ஈரானின் மசகு எண்ணெயை மாத்திரம், சுத்திகரிக்கும் வசதிகளை மாத்திரமே சிறிலங்கா கொண்டிருந்தது.

அனைத்துலக தடைகள் விதிக்கப்பட்டதை அடுத்து, சவூதி அரேபியா மற்றும் ஓமானிடம் இருந்து எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.

விரிவான கூட்டு செயல் திட்ட உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த பின்னர், சிறிலங்கா அதிபரின் இந்தப் பயணம் இடம்பெறுகிறது.

இதன் மூலம், குறைந்த விலையில் ஈரானிடம் எண்ணெய் கொள்வனவு செய்வதற்கான உடன்பாடு கையெழுத்திடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா அதிபருடன், அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, ரவூப் ஹக்கீம், விஜேதாச ராஜபக்ச, றிசாத் பதியுதீன் ஆகியோரும், நேற்று புறப்பட்டுச் சென்றனர்.

செக் குடியரசுக்குச் சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அங்கிருந்து ஒரு நாள் முன்னதாகவே தெஹ்ரான் சென்றடைந்துள்ளார்.