மீண்டும் பதவியேற்கவுள்ள 3 முஸ்லிம் அமைச்சர்கள் – சிறிலங்கா அதிபருடன் இன்று பேச்சு

பதவியில் இருந்து விலகிய மூன்று முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது குறித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், ஐக்கிய தேசியக் கட்சி இன்று கலந்துரையாடவுள்ளது.

கடந்தவாரம் கூட்டப்படாத அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை சிறிலங்கா அதிபர் செயலகத்தில், அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு முன்னோடியாக, இதில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆலோசனை நடத்தும் கூட்டம் நேற்று அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மீண்டும் மூன்று முஸ்லிம் அமைச்சர்களை நியமிப்பது குறித்து, சிறிலங்கா அதிபருடன் கலந்துரையாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர், இதுபற்றி சிறிலங்கா அதிபருடன் ஐதேக அமைச்சர்கள் பேசவுள்ளனர். சிறிலங்கா அதிபர் உடன்பட்டால், பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மூவர் மீண்டும் பதவி ஏற்றுக் கொள்ளவுள்ளனர்.

ரவூப் ஹக்கீம், ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே மீண்டும் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

தமக்கெதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க அரசாங்கத்துக்கு அளிக்கப்பட்டுள்ள காலஅவகாசம் மற்றும் தாம் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு இணங்காமல் அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!