அமெரிக்கப் படைகள் இலங்கையில் கால் வைக்கலாம்! – பாதுகாப்பு செயலாளர்

அமெரிக்க படைகள் இலங்கையில் கால் வைக்காது என்று தன்னால் உத்தரவாதம் கொடுக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் அவ்வாறு அமெரிக்க படைகள் இலங்கைக்கு வரும் என்று நான் நம்பவில்லை. தற்போது பேசப்பட்டு வருகின்ற சர்ச்சைக்குரிய சோபா ஒப்பந்தம் தொடர்பாக நாங்கள் படித்து பகுப்பாய்வு செய்துள்ளோம். சில பிரிவுகள் குறித்து சம்பந்தப்பட்ட அமெரிக்க அதிகாரிகளுக்கு எமது கருத்தினை தெரிவித்துள்ளோம்.

குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முன்னர் இது அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். எவ்வாறாயினும் நாட்டின் நலன்களுக்காகவே இந்த ஒப்பந்தம் கொண்டுவர திட்டமிடப்படுகின்றது. அது நாட்டினதும் பிராந்தியத்தினதும் ஒருமைப்பாட்டிற்கு எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தாது என்பதை உறுதியாக கூறமுடியும்.

எமது இராணுவம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி வருகின்றது. எனவே இலங்கைக்கு வெளிநாட்டுப் படைகள் தேவையில்லை. இதுபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதில் இலங்கை மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்.” என கூறினார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!