கல்முனை விவகாரம் ; 3 மாதத்திற்குள் தீர்வு – வஜிர அபேவர்தன

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு தொடர்பாக நியமிக்கப்பட்ட தேசிய குழுவின் செயற்பாடுகள் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களின் காரணமாகவே தாமதமாகியுள்ளது. எனினும் இந்த பிரச்சினைக்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என்று உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு ஒரு சுயாதீன பிரிவாக செயற்பட வேண்டிய அவசியம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்னதாகவே சுட்டிக்காட்டியிருந்தனர். அதற்கிணங்க இவ்வருடம் ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றலுடன் நடைபெற்ற கூட்டத்தில் இப்பிரிவிற்கென ஒரு தனியான கணக்காளர் நியமிக்கப்பட்டார். தற்போது அவர் மாவட்ட செயலகத்திலிருந்து செயற்படுகின்றார்.

மேலும் இது தொடர்பாக காணி மற்றும் கிராம அலுவலர் பிரிவு தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் தொடர்புடைய கட்சிகளின் பிரதிநிதித்துவங்களை இணைத்து 2019 ஏப்ரல் மாதம் ஒரு தேசிய குழுவும் நியமிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குதல் காரணமாக இந்தக் குழுவின் நடவடிக்கைகள் தாமதமாகியுள்ளது. எவ்வாறிருப்பினும் இந்த பிரச்சினை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் விரைவாக தீர்த்து வைக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!