இந்திய புலனாய்வுதுறையுடன் இணைந்து செயற்படும் சிறிலங்கா இராணுவம்

ஐஎஸ் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, இந்திய புலனாய்வுத்துறையுடன், சிறிலங்கா இராணுவம் இணைந்து செயற்படுவதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மாதுறுஓயா இராணுவப் பயிற்சி முகாமில், சிறிலங்கா இராணுவ சிறப்புப் படையினர் பயிற்சியை முடித்து வெளியேறும் நிகழ்வில்,பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும் கூட, எந்த நேரத்திலும் நெருக்கடி ஏற்படலாம். எந்த நாட்டிலும் அது இயல்பு.

நாட்டின் புலனாய்வு விடயங்களில் இந்திய புலனாய்வு அமைப்புகளுடன், ஒத்துழைத்துச் செயற்படுகிறோம்.

அனைத்துலக பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் போராடுவதால் அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் இடையே ஒரு தொடர்பு இருக்க வேண்டும்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும், குற்ற விசாரணைத் திணைக்களம், காவல்துறை, நாடாளுமன்றத் தெரிவுக் குழு உள்ளிட்ட எந்தவொரு விசாரணைகளுக்கும் ஒத்துழைத்துச் செயற்பட இராணுவம் விரும்புகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!