தந்தையின் கனவை நனவாக்க கிடைத்ததில் மகிழ்ச்சி – சஜித் பிரேமதாச

இலங்கையில் மாதிரி கிராமங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கடந்த 2000 ஆம் ஆண்டு என்னுடைய தந்தை ரணிசிங்க பிரேமதாச எதிர்பார்த்தார்.எனினும் அவரால் நிறைவேற்ற முடியாத அந்த கனவை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை – கெலியபுற பிரதேசத்தில் மாதிரி கிராம வீட்டுத்திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழா இன்று இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,

2025 ஆம் ஆண்டளவில் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 20 ஆயிரம் மாதிரி கிராமங்கள் அமைக்கும் இலக்கை அடைந்து கொண்டிருக்கின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது.

இன்று இந்த மாதிரி கிராம வேலைத்திட்டத்தின் மூலம் பயன்களைப் பெற்றுக் கொள்ளும் 55 குடும்பங்களும் மிகச் சிறிய வீடுகளிலேயே வாழ்ந்தனர். அனைவரும் பொது மலசலகூடங்களையே பயன்படுத்தினர். ஆனால் இன்று அந்த நிலைமை எம்மால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2,499 மாதிரி கிராம திட்டத்தின் கீழ் 25 வீடுகளும், 2500 மாதிரி கிராம வீட்டுத்திட்டத்தின் கீழ் 30 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த மாதிரி கிராம திட்டம் கிராம சக்தி வீட்டுத்திட்டத்தின் கீழ் உள்ளடங்குகின்றது.

ரணசிங்க பிரேமதாஷவினுடைய காலத்திலும் ஜூன் மாதத்திலேயே இவ்வாறான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. நாமும் எமது இலக்கை அடைவதற்காக இந்த மாதத்தில் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளமை சிறப்பம்சமாகும்.

இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்திருந்த போதிலும், அதற்கு இரு மாதங்களுக்கு முன்னரே ஆரம்பிக்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்கின்றது.

என்னுடைய தந்தை ரணசிங்க பிரேமதாச கடந்த 2000 ஆம் ஆண்டு இவ்வாறு மாதிரி கிராமங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். எனினும் அதனை நிறைவேற்றுவதற்கு முன்னரே அவர் கொல்லப்பட்டார். அவருடைய கனவை நிறைவேற்றக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தமையையிட்டு பெருமையடைகின்றேன்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்ட போது 40 மாதிரி கிராமங்கள் அமைக்கப்பட்டு இந்த வேலைத்திட்டம் ஆரம்பமானது. அவை பின்னர் நூறிலிருந்து தற்போது 2500 வரை அதிகரித்துள்ளது. வறுமையிலுள்ள மக்களை அதிலிருந்து மீட்பதும், அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதுமே இன்று நாட்டின் தேவையாகவுள்ளது. அத்தோடு நாட்டை பொது மக்கள் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்பதும் எமது எதிர்பார்ப்பாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!