பல விடயங்களில் ஜனாதிபதியை ஐக்கிய தேசியக் கட்சி ஏமாற்றியுள்ளது – தயாசிறி

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் பல விடயங்களில் ஜனாதிபதியை ஐ.தே.க ஏமாற்றியுள்ளது ஜனாதிபதி ஆட்சி முறைமைக்குள் பிரதமர் ஆட்சி என்ற நிலைமையே இன்று நாட்டில் காணப்படுகிறது என தயாசிறி தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரசியலமைப்பொன்று கொண்டு வரப்படும் போது அதற்கான தேவை, அதன் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து முதலில் கவனத்தில் கொள்ளவேண்டும். அத்தோடு அரசியல் மற்றும் சிவில் அமைப்புக்கள் என அனைவரதும் இணக்கப்பாட்டுடன் அது நிறைவேற்றப்படவேண்டும். இவ்வாறான நிலையிலேயே 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது.

18 ஆவது திருத்தத்தில் ஒருவர் எத்தனை தடவையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்று கொண்டு வரப்பட்டது. 18 ஆம் திருத்தம் நடைமுறையிலிருந்த போது நான் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினராக இருந்தேன். அதன் போது அதற்கு எதிராக பல தடவைகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்ததோடு, பல சந்தர்ப்பங்களில் எதிர்ப்பினையும் வெளியிட்டிருந்தேன்.

அதனைத் தொடர்ந்து 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் 19 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதனை நிறைவேற்றுவதற்கு வாக்களிப்பதற்கு நாம் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத போதும், 18 ஐ வலுவிழக்கச் செய்வதில் நானும் முன்னின்று செயற்பட்டிருக்கின்றேன். ஆனால் அதன் விளைவை இப்போது தான் உணர்கின்றோம்.

19 ஆம் திருத்தத்திற்கு சரத் வீரசேகரவைத் தவிர ஏனைய அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளித்தனர். இதன் மூலம் தனக்கான அதிகாரத்தை தானே குறைத்துக் கொண்ட முதலாவது நபர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரமே. ஜனாதிபதிக்கான அதிகாரங்களைக் குறைத்து பாராளுமன்றத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்படுவது நாட்டு நலனுக்கு உகந்தது என்று கருதியே ஜனாதிபதியும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினார். ஆனால் பல விடயங்களில் நெருக்கடிகள் ஏற்பட்ட போதே அதன் பாதகத்தன்மையை அவர் புரிந்து கொண்டார்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைத்தல் மற்றும் அதன் அதிகாரங்கள், நீதியரசர்களை நியமித்தல், பாராளுமன்றம் , அமைச்சரவை தொடர்பான தீர்மானங்கள் என்று பல விடயங்களில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களுக்கு முரண்பட்ட வகையிலேயே 19 ஆம் திருத்தத்தில் ஏற்பாடுகள் உள்ளன. இவை தொடர்பாக ஒரு அத்தியாயத்தில் ஜனாதிபதி சுயாதீனமாக தீர்மானமெடுக்க முடியும் என்றும் வேறொரு அத்தியாயத்தில் ஜனாதிபதியால் ஆலோசனை மட்டுமே வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

19 ஆம் திருத்தத்தில் பொதுத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் அத்திருத்தத்தில் அமுலாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அரசியலமைப்பை அமுல்படுத்துவதில் கூட இவ்வாறு சிக்கல் நிலைமை காணப்படுகின்றது.

இதன் மூலம் ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதிமன்றத்தை நாடினால் ஜனாதிபதியுடைய பதவி காலத்தை நீடிப்பதற்காகவே இவ்வாறான பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படுகின்றன என்றே தீர்ப்பு வழங்கப்படும். காரணம் அரசியலமைப்பின் படி நீதியரசர்களின் நியமனமும் பக்கச் சார்பாகவே உள்ளது.

19 இன் மூலம் ஜனாதிபதியுடைய அதிகாரங்களை முற்றாகக் குறைத்து முழு அதிகாரமும் பிரதமருக்கு கீழ் கொண்டு வரப்படவேண்டும் என்பதே ஐ.தே.கவின் எதிர்பார்ப்பாகும். அதற்காக சதிசெய்து இதனை நிறைவேற்றியுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரண்டு தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போதிலும் அவரால் முழு நாட்டு மக்களின் வாக்குகளையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இனிமேல் போட்டியிட்டாலும் அவரால் வெற்றி பெற முடியாது.

அதனால் தான் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவை வேட்பாளராகக் களமிறக்கி அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள திட்டமிட்டார். தேர்தலில் களமிறக்கி வெற்றி பெறச் செய்தது நாம் தான். எனவே அதிகாரம் எமக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தற்போது பிரதமர் இருக்கின்றார். அதாவது ஜனாதிபதி ஆட்சி முறைமையினுள் பிரதமர் ஆட்சி என்ற நிலைமையே இப்போது காணப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!