அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதிய உடன்பாடு – சிறிலங்கா அதிபர் முட்டுக்கட்டை

அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடனான உடன்பாடு, நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர், அதன் ஒவ்வொரு பிரிவும் கவனமாக ஆராயப்பட வேண்டும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்காவின் சுதந்திரமான உதவி முகவர் நிறுவனமான மிலேனியம் சவால் நிறுவனம், பூகோள வறுமைக்கு எதிராகப் போராடுவதற்கு உதவிகளை வழங்கி வருகிறது.

இந்த நிறுவனம், ஐந்து ஆண்டு காலப்பகுதியில், நகர போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, பொது போக்குவரத்து முறைகளை நவீனமயப்படுத்துவது, காணி முகாமைத்துவத்தை மேம்படுத்துவது ஆகிய மூன்று திட்டங்களுக்காக சிறிலங்காவுக்கு 480 மில்லியன் டொலரை கொடையாக வழங்க முன்வந்துள்ளது.

இந்த நிதிக்கொடையைப் பெற்றுக் கொள்வதற்கான சிறிலங்காவின் கடப்பாடுகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் செயற்படும், தேசிய பொருளாதார சபை தமது அவதானிப்புகளை, சிறிலங்கா அமைச்சரவைக்கு அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், இந்த உடன்பாடு முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும், சிறிலங்காவின் காணி முகாமைத்துவத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் குறித்து சில ஒதுக்கீடுகள் பற்றி வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட நிதி அமைச்சர் மங்கள சமரவீர, முன்னைய அரசாங்கம் இந்த கொடையைப் பெற்றுக் கொள்வதில் வெற்றிபெறவில்லை என்றும், தற்போதைய அரசாங்கத்தின் நல்லாட்சி தொடர்பான கொள்கைகளினால், அதனைப் பெற்றுக் கொள்ளும் தகுதியைப் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

எனினும், உடன்பாட்டில் கையெழுத்திட முன்னர், அதன் ஒவ்வொரு பிரிவும் ஆழமாக ஆராயப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!