மரணதண்டனைக்கு அனைத்துலக அளவில் கடும் எதிர்ப்பு

சிறிலங்காவில் 4 கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற, அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆணையிட்டுள்ள நிலையில், அனைத்துலக அளவில் கடும் எதிர்ப்புத் தோன்றியுள்ளது.

தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் முடிவை உடனடியாக நிறுத்துமாறு அனைத்துலக மன்னிப்புச்சபை, மற்றும் பிரித்தானியா, கனடா, உள்ளிட்ட நாடுகள் கோரியிருந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியமும் நேற்று கவலை வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா மீண்டும் மரணதண்டனையை நடைமுறைக்குக் கொண்டு வருவதானது,அனைத்துலக சமூகத்துக்கும், முதலீட்டாளர்களுக்கும், தவறான சமிக்ஞையைக் காட்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம், எச்சரித்துள்ளது.

அத்துடன்,அத்துடன், ஜிஎஸ்பி பிளஸ் சலுகை குறித்த கடப்பாடுகளுடன் தொடர்புடைய அனைத்துலக பிரகடனங்களை சிறிலங்கா நடைமுறைப்படுத்துகிறதா என்றும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மேலும், 2018 டிசெம்பரில் நடந்த ஐ.நா பொதுச்சபையின் 73 ஆவது கூட்டத்தொடரில், மரணதண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக சிறிலங்கா அளித்த வாக்குறுதியை நினைவுபடுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், அந்த வாக்குறுதியை சிறிலங்கா காப்பாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!