அபிவிருத்திக்காக உரிமையை விட்டுக் கொடுக்கமாட்டோம்! – சம்பந்தன்

அபிவிருத்தியின் பெயரில் உரிமையை விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை இந்துக்கலாசார மண்டபத்தில் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றிய 1119 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்று நியமனங்கள் வழங்கப்படுகின்றன. ஒரு காலத்தில் அவர்கள் வடக்கு கிழக்கில் பாரிய சேவையை ஆற்றினார்கள்.விசேடமாக யுத்தம் காரணமாக மக்கள் குடிபெயர்ந்து, ஆசிரியர்கள் குடிபெயர்ந்து, பாடசாலைகள் குடிபெயர்ந்து பல்வேறு சிரமங்களை அனுபவித்தபோது தங்களது கடமைகளையாற்றியவர்களுக்கு நன்றி கூறுகின்றோம்.

நாங்கள் எல்லோரும் உங்களுக்கு இந்த நியமனம் கிடைப்பதையிட்டு சந்தோசமடைகின்றோம். அதே போன்று நீங்களும் ஆக்கபூர்வமாகக் கடமையாற்ற்ககூடிய நிலைமையை அடைய வேண்டும். அடையவில்லை என்று நான் கூறவில்லை. ஆனால் அதில் ஏதும் குறைகள் இருக்குமாக இருந்தால், அந்தக் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு உங்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு, அந்தத் தகையையை நீங்கள் முழுமையாகப் பெறவேண்டும்.

அதற்குரிய திட்டத்தை அரசாஙக்கம் வகுத்து. குறிப்பாக கல்வி அமைச்சு வகுத்து தொண்டராசிரியர் நியமனம் பெற்றவர்கள் சிறப்பாக கடமையாற்றுவதற்கு பயிற்சிகள் வழங்க வேண்டும்.

இன்று வடக்கு, கிழக்கில் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் நடைபெறுகின்றன. அதற்கு நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்.ஆனால் அபிவிருத்தியின் பெயரில், உரிமையை விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. எங்களுடைய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் அதன் அடிப்படையில் அபிவிருத்திகள் பெற்றால் சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!