7 நாட்களுக்குள் தூக்கு இல்லை- சிறைச்சாலைகள் ஆணையாளர் உறுதி

அடுத்த 7 நாட்களுக்கு எந்த சிறைக்கைதியும் தூக்கிலிடப்பட மாட்டார்கள் என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், உறுதி அளித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 4 கைதிகளை தூக்கிலிடும் ஆணையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ள நிலையில், அதனைத் தடுத்து நிறுத்துமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் அவசர மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

மூத்த ஊடகவியலாளர் மலிந்த செனிவிரத்ன, தாக்கல் செய்த இந்த மனுவில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலை கண்காணிப்பாளர், வெலிக்கடை சிறைச்சாலை தூக்குத்தண்டனை நிறைவேற்றபவர், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்த மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் யசந்த கோத்தாகொட, நீதியரசர் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது முன்னிலையாகிய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், அடுத்த 7 நாட்களுக்கு, எந்தவொரு சிறைக்கைதியும் தூக்கிலிடப்படமாட்டார் என்று நீதிமன்றில் உறுதியளித்தார்.

இதையடுத்து வரும் செவ்வாய்க்கிழமை இந்த வழக்கின் விசாரணைகளை நீதியரசர்கள் ஒத்திவைத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!