நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று விவாதம் – நாளை வாக்கெடுப்பு

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்றும் நாளையும், நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்களை தடுக்க தவறி விட்டனர் என்று குற்றம்சாட்டி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஜேவிபி, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

பிரதமர், அமைச்சரவை மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை இன்றும் நாளையும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீது நாளை மாலை 6.30 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கூட்டு எதிரணி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஆதரவாக வாக்களிக்கும் என்று கூறப்படுகிறது.

அதேவேளை, பெரும்பான்மை பலத்தை கொண்டிராத ஐதேக அரசாங்கம், கவிழுமா- காப்பாற்றப்படுமா என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!