இன்று சிறிலங்கா வருகிறார் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு இணைப்பாளர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத முறியடிப்பு இணைப்பாளர் கில்ஸ் டி கெர்சோவ், சிறிலங்காவுக்கும் மாலைதீவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று தொடக்கம், 16ஆம் நாள் வரை அவர், சிறிலங்காவிலும் மாலைதீவிலும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இரு நாடுகளும், தமது பாதுகாப்பை அதிகரிப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கிலும், சிறந்த அனுபவ பரிமாற்றத்தை உருவாக்கும் நோக்கிலும் இவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

சிறிலங்கா வரும் கில்ஸ் டி கெர்சோவ், அரசாங்க உயர்மட்டப் பிரதிநிதிகளையும், எதிர்க்கட்சி மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளையும், சிவில் சமூகப் பிரதிநிதிகளையும், சந்திக்கவுள்ளார்.

அத்துடன் சிறிலங்காவில் உள்ள இராஜதந்திரிகளுடனும் அவர் கலந்துரையாடவுள்ளார்.

2007ஆம் ஆண்டில் இருந்து கில்ஸ் டி கெர்ச்சோவ், ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு இணைப்பாளராக பணியாற்றுகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!