சிறிலங்காவுடன் அமெரிக்கா இணைந்து நிற்கும் – ட்ரம்ப் உறுதி

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் சிறிலங்காவுடன் அமெரிக்கா இணைந்து நிற்கும் என்றும், பயங்கரவாத எதிர்ப்பு, கடல் மற்றும் எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ரொட்னி பெரேரா கடந்த திங்கட்கிழமை அமெரிக்க அதிபரைச் சந்தித்து நியமன ஆவணங்களை கையளித்த போதே, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றில் பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் வேரூன்றியுள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தி, ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார்.

உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து, நிலையான அமைதியை அடைவதற்கான நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதி செய்வதில் சிறிலங்காவின் உறுதிப்பாட்டை அவர் வரவேற்றார் எனவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!