‘சோபா’வை எதிர்க்கும் சிறிலங்கா – உன்னிப்பாக கவனிக்கும் புதுடெல்லி

அமெரிக்கப் படைத்தளத்தை அமைப்பதற்கு அனுமதியளிக்கக் கூடிய, அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு, சிறிலங்காவில் அதிகரித்து வரும் எதிர்ப்புகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக, புதுடெல்லியில் இருந்து வெளியாகும் ‘எகொனமிக் ரைம்ஸ்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் இறைமையை மீறும் எந்தவொரு உடன்பாட்டிலும் கையெழுத்திடப் போவதில்லை என்று சிறிலங்கா பிரதமர் புதன்கிழமை அறிவித்த நிலையில், நெருங்கிய அண்டை நாடு என்ற வகையில் கொழும்பின் முடிவுக்கு மதிப்பளிப்பது என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருக்கிறது.

”இந்த விடயத்தில் கொழும்பின் முடிவுக்கு புதுடெல்லி மதிப்பளிக்கும்.இந்தியாவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த எமது சுற்றுப்புறத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்,” என்று தமது பெயரை வெளியிட விரும்பாத தகவலறிந்த வட்டாரம் ஒன்று எகொனமிக் ரைம்சிடம் தெரிவித்தது.

அமெரிக்கா முன்மொழிந்துள்ள சோபா உடன்பாட்டுக்கு சிறிலங்காவில் எதிர்ப்புகள் தோன்றியுள்ளதால், கடந்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ தமது பயணத்தை ரத்து செய்திருந்தார் என்றும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!