கனமழையால் நேபாளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: உயிரிழப்பு 65 ஆக உயர்வு!

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. 28 மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து மின்சாரம் தடைபட்டுள்ளது. மழையால் நாட்டின் பல தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். கனமழையால் நேற்று வரை 60 பேர் பலியானதாக அரசு தெரிவித்திருந்தது. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நேபாள காவல்துறை மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 38 பேர் காயமடைந்திருப்பதாகவும், 30 பேரைக் காணவில்லை என்றும் கூறியுள்ளது.

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் 22 மாவட்டங்களில் இருந்து இதுவரை 1146 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும், கடந்த மூன்று நாட்களில் மட்டும் 33 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.