வாக்குறுதியை நிறைவேற்றினால் பேசலாம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக, வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமையால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோருடனான சந்திப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது. அதற்கு நிபந்தனையாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நிதி அதிகாரம் முழுமையாக வழங்கப்பட்டு கணக்காளர் நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அதற்கு உடன்பட்டு எழுத்துமூலம் உறுதி வழங்கப்பட்டது.

அதன் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பில் ரவூப் ஹக்கீம் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

முதலில் கணக்காளர் நியமனம் இடம்பெறட்டும். அதன் பின்னர் எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராயலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் தொடர் சந்திப்பு நேற்று நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நேற்றைய சந்திப்புக்கு அழைத்திருந்தனர். எனினும், “வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கணக்காளர் பதவியைப் பொறுப்பேற்கவில்லை. முதலில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். அதன் பின்னர் பேசலாம்” என்று அவர்களிடம் தெரிவித்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தொடர்புகொண்டு சந்திப்புக்கு வருமாறு அழைத்துள்ளார்.

மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைத் தொடர்புகொண்டு, நீங்கள் சந்திப்புக்கு வரத்தேவையில்லை. கோடீஸ்வரனை சந்திப்புக்கு அழைத்துள்ளோம் என்று சாரப்பட சுமந்திரனிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனும், வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் சந்திப்பில் கலந்து கொள்ள மாட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அமைச்சருக்குப் பதில் வழங்கியுள்ளார். இதன் காரணமாக நேற்றைய சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்கவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!