வாக்குறுதியை மறந்த ரணில் – கூட்டமைப்புடனான உறவில் விரிசல்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்த வாக்குறுதியை சிறிலங்கா பிரதமர் காப்பாற்றத் தவறியுள்ள நிலையில், கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகளில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கும், உடனடியாக கணக்காளர் ஒருவரை நியமித்து நிதி அதிகாரங்களை வழங்குவதற்கும் ரணில் விக்ரமசிங்க இணங்கியிருந்தார்.

அதற்கமைய ரணில் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களித்திருந்தது.

கணக்காளர் பதவியேற்பில் இழுபறி

எனினும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நியமிக்கப்பட்ட கணக்காளர் அங்கு பதவியைப் பொறுப்பேற்க இன்னமும் வழிவகை செய்யப்படவில்லை. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த திங்கட்கிழமை ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில், கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினை ஒன்றை முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எழுப்பியிருந்தார்.

முதலில் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முதலில், கணக்காளர் நியமனம் தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுமாறும், அதற்குப் பின்னர் எல்லை நிர்ணயம் பற்றி பேசலாம் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் வியாழக்கிழமை இந்த விவகாரம் குறித்து ஆராய ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திலும் சுமந்திரன் பங்கேற்க மறுத்திருந்தார்.

கோடீஸ்வரனை வளைக்க முயற்சி

இதையடுத்து, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனை இந்தக் கூட்டத்துக்கு அரசாங்கத்தின் சார்பில் உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தன அழைப்பு விடுத்தார்.

ஆனால், கூட்டமைப்பு தலைமையின் அறிவுறுத்தலை அடுத்து. அவரும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்து விட்டார்.

இந்த நிலையில், அரசாங்கத்தின் மீது கூட்டமைப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

சந்திக்காமல் நழுவிய சம்பந்தன்

இந்த விவகாரம் குறித்து இரா.சம்பந்தனை சந்திப்பதற்கு அமைச்சர் வஜித அபேவர்த்தன இரண்டுமுறை முயற்சிகளை மேற்கொண்ட போதும், அது தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில், முறுகல் நிலையை தணிப்பதற்காக, நேற்றிரவு 9.30 மணியளவில் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, இரா.சம்பந்தனை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்து சமாதானப்படுத்த முற்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பில் இணக்கப்பாடுகள் ஏதும் எட்டப்பட்டதா என்ற தகவல் இன்னமும் வெளியாகவில்லை.

கொதிப்பில் மனோ கணேசன்

இதற்கிடையே, கன்னியா மற்றும் நீராவியடி பிள்ளையார் ஆலயங்களை அகற்றி அங்கு விகாரைகளை அமைக்கும் முயற்சிகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபருடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காததால், அமைச்சர் மனோ கணேசன் அதிருப்தி அடைந்துள்ளார்.

மனோ கணேசனின் ஏற்பாட்டில் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், நேற்று முன்தினம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தச் சந்திப்பில் வடக்கு, கிழக்கை சேர்ந்த வியாழேந்தின் தவிர்ந்த வேறெந்த நாடாளுமன்ற உறுப்பினரும் பங்கேற்கவில்லை.

இனித் தலையிடமாட்டேன்

இதனால் அதிருப்தியடைந்துள்ள மனோ கணேசன், வடக்கு, கிழக்கு உரிமை பிரச்சினைகள் தொடர்பாக இனிமேல் தாம் தலையிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

“எனது அமைச்சின், பணிகள் தொடர்பான அபிவிருத்தி, வாழ்வாதாரம், அமைச்சரவை பத்திரங்கள் ஆகிய மட்டங்களில் எனது பணி வட கிழக்கில் தொடரும்.

இவை பற்றி நானே முடிவு செய்வேன். இவை தவிர்ந்த வட-கிழக்கின் உரிமை பிரச்சினைகள் தொடர்பில், வட கிழக்கின் மக்கள் பிரதிநிதிகள் எழுத்து மூலமான கோரிக்கைகளை முன்வைப்பார்கள் எனில் அவற்றை நான் பரிசீலிப்பேன். இல்லையேல் இந்த விவகாரங்களில் தலையிடமாட்டேன்” என்று கூறியுள்ளார்.

சம்பந்தனுக்கு அழைப்பு இல்லை

அதேவேளை, சிறிலங்கா அதிபருடனான சந்திப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு, சிறிலங்கா அதிபரிடம் இருந்தோ, அமைச்சர் மனோ கணேசனிடம் இருந்தோ அழைப்புகள் ஏதும் அனுப்பப்படவில்லை என, கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறியுள்ளார்.

தனியாக சந்திப்பு

அதேவேளை, விகாரைகள் அமைக்கப்படுவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சிறிலங்கா அதிபருடன் பேச நேரம் ஒதுக்கித் தரக் கோரியுள்ளதாகவும், இதன் போது இந்த விவகாரங்கள் குறித்து கூட்டமைப்பு பேசும் என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!