அமெரிக்க படைகளை அனுமதிக்கும், மறுக்கும் உரிமை சிறிலங்காவுக்கே – அலய்னா ரெப்லிட்ஸ்

சிறிலங்காவுடன் சிறப்பு படைகள் ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ள அமெரிக்கா விரும்புகிறதே தவிர, இங்கு இராணுவத் தளத்தை அமைக்கும் எண்ணம் ஏதும் கிடையாது என அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இங்கு வரும் அமெரிக்க படையினர் தொடர்பான வரையறைகளை உருவாக்கும் நோக்கிலேயே வருகை படைகள் உடன்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்னமும் இரண்டு நாடுகளும் பேசிக் கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே உள்ள உடன்பாட்டை புதுப்பித்துக் கொள்வது தான், வருகைப் படைகள் உடன்பாடு. இது அதிகார மற்றும் விதிமுறைகள் தொடர்பான அதிகப்படியான, சிக்கல்களை தீர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு, 2017 இல் சிறிலங்காவில் வெள்ளம் ஏற்பட்ட போது, சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவின் உதவியை நாடியது. அமெரிக்க விமானங்கள், நிவாரணப் பொருட்களைக் கொண்டு வந்த போது, அந்த விமானங்களுக்கு அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டிய தேவை ஏற்பட்டது.

அவசர நிலைமைகளின் போது, இந்த நடைமுறைகளை விரைவுபடுத்த அமெரிக்காவுக்கு புதிய உடன்பாடு அனுமதிக்கும்.

அதிகப்படியான விதிமுறைகள் மற்றும் செயல்முறைகளில் நேரத்தை செலவிட நாம் விரும்பவில்லை.

இந்த உடன்பாடு இரு நாடுகளினதும் நலனுக்கான விதிகளை வகுக்கிறது. எந்த தளத்தையும் அமைக்கும் நோக்கமோ, அமெரிக்க படைகளை நிரந்தரமாக நிறுத்தும் எண்ணமோ எமக்குக் கிடையாது.

அமெரிக்க படையினர், கப்பல்கள் மற்றும் விமானங்களின் அனைத்து நுழைவுக்கும் ஒப்புதல் அளிக்கின்ற அல்லது மறுக்கின்ற உரிமையை சிறிலங்காவே கொண்டிருக்கும்” என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!