பேராயர் மல்கம் ரஞ்சித்துக்கு சிறிலங்கா அதிபர் பதிலடி

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வைத்த குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

குண்டுத் தாக்குதலுக்குள்ளான கடுவாப்பிட்டிய தேவாலயத்தை நேற்றுமுன்தினம் மீளத் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், தற்போதைய ஆட்சியாளர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்றும், அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு கூறுகின்ற நேரம் வந்துள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

அத்துடன், குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணைகளில் தமக்கு நம்பிக்கையில்லை என்றும், அரசாங்கத்தை கடுமையாக அவர் விமர்சித்திருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முற்றாக நிராகரித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,

“ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து பல்வேறு அரசியல் நிகழ்ச்சி நிரல்களை மனதில் கொண்டு, யாரும் முடிவுக்கு வரக்கூடாது.

தாக்குதல்களுக்குப் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் தனது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றியது.

இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்பு நாட்டிலிருந்து முற்றாகவே அழிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களுக்கு வழிவகுத்த அனைத்து அம்சங்களையும் ஆராயும் வகையில், ஒரு பக்க சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணை நடந்து வருகிறது.

அனைத்து மதங்களையும் மதத் தலைவர்களையும் நான் மதிக்கிறேன்.

எந்தவொரு நபருடனும் ஏதேனும் பிரச்சினை இருந்தால் வெளிப்படையாக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.

இந்த விவாதத்தை ஊடகங்களுக்கு முன்பாக நடத்துவதற்கும் நான் தயார்.

2015 அதிபர் தேர்தலின் போதும், அதன் பிறகு பல சந்தர்ப்பங்களிலும், முதுகெலும்புள்ள ஒரு தலைவராக நான் நிரூபித்துள்ளேன்.

சில சக்திகள், எனக்கு முதுகெலும்பு இல்லை என்று சித்தரிக்க முயற்சிக்கின்றன.” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!