மகிந்தவுடனான சந்திப்பு – அமெரிக்க தூதுவர் மௌனம்

சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர், சிறிலங்கா எதிர்கொண்டுள்ள சவால்கள், தற்போதைய அரசியல் சூழல், இரண்டு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள உறவுகளை எவ்வாறு மேலும் வலுப்படுத்தலாம் ஆகிய விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் செயலகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பில் மகிந்த ராஜபக்சவுடன், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், கெஹலிய ரம்புக்வெல ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவுடன் மூன்று உடன்பாடுகளை செய்து கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மகிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்த நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

எனினும், அமெரிக்க தூதரகம் இந்தச் சந்திப்பு தொடர்பாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!