இழுபறிக்கு முரண்பாடே காரணம்!

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் சிங்களத் தலைவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற சந்தேகம் தமிழ் மக்களின் மனங்களில் ஆழமாக பதிந்து விட்டது, பிரதான கட்சிகள் மத்தியில் உள்ள முரண்பாட்டு நிலைமையே புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள இழுபறிக்கு பிரதான காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன,தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கல் விவகாரத்தை முன்வைத்து அரசாங்கத்தின் போக்கினை சுட்டிக்காட்டும் நோக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனினால் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவரப்பட்டது.

இந்தப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜயம்பதி விக்ரமரத்ன,

“இனப்பிரச்சினை தீர்வு விடயப் பிரச்சினையை அடுத்த பரம்பரைக்கு இட்டுச்செல்ல இடமளிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி சிறிசேன தேர்தல் காலத்தில் கூறியிருந்தார். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்ததோடு தமிழ் மக்களும் அவருக்கு வாக்களித்தனர். 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் அவர் பேசியபோது தெற்கில் உள்ளவர்கள் சமஸ்டிக்கும், வடக்கில் உள்ளவர்கள் ஒற்றையாட்சிக்கும பயப்படுவதாக கூறியிருந்தார். யாருமே பயப்படாத அதிகபட்ச அதிகாரப்பரவலே அவசியம் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆகவே அந்தப்பகுதியில் இருப்பவர்களுக்கு இதற்கு எதிர்க்க உரிமையில்லை. தமிழ் மக்கள் இடையே இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு தெற்கிலுள்ள சிங்களத் தலைவர்களுக்கு ஆர்வம் இருக்கிறதா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நாங்கள் புதிய அரசியலமைப்பு குறித்து தற்போது இடைக்கால அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்திருக்கின்றோம். அதனை முழுமையாக ஏற்பதாக பிரதமர் ரணில் இந்த நாடாளுமன்றத்தில்தான் கூறியிருந்தார். இருந்த போதிலும் இடைக்கால அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை ஏற்பதில் பிரதான கட்சிகளிடையே ஒற்றுமையில்லை. அதன் காரணமாகவே தற்போது புதிய அரசியலமைப்பு விடயத்தில் இழுபறி நிலை காணப்படுகின்றது”.

புதிய அரசியல் சாசனத்தை முழுமையாக பூர்த்திசெய்து அதனை நடைமுறைப்படுத்த முடியாததற்கான பொறுப்பை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எமது பக்கமும் பிழை உள்ள போதிலும் ஒரு கையினால் ஓசை எழுப்பமுடியாது. எமக்கும் தற்போது சோர்வுநிலை காணப்படுகின்றது. அரசாங்கமும் இதன் பொறுப்பை ஏற்கவேண்டும். இந்த இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தபோது நாட்டைப்பிரிக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்கள். ஆனால் அதில் அப்படி ஒன்றுமே இல்லை. முதற் தடவையாக நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்டால் மாகாண சபைகளை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் இந்த அரசியலமைப்பு யோசனையை தயாரித்தவர்களை தண்டிக்க வேண்டும்

என்று இராணுவ முன்னாள் அதிகாரிகளும் அதேபோன்று கடும்போக்குவாத இனவாதிகளும் கூறியிருந்தனர். இனப்பிரச்சினை மற்றும் புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் முன்நிற்கின்ற எமது உயிருக்கும் தற்போது அச்சுறுத்தல் உள்ளது. இன்று இந்த நாடாளுமன்றத்துக்கு ஜனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்ளப்படும்

இடையூறுகள் அனைத்தும் எதிர்காலத்திலும் ஏற்படலாம். அதனைத் தடுப்பதற்கு நிறைவேற்று அதிகார முறையை இரத்து செய்ய வேண்டும். ஆகவே 20ஆவது திருத்தத்தை நாம் ஆதரித்து அதனை நிறைவேற்ற முன்வர வேண்டும்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!