‘எனக்கும் ஒரு துப்பாக்கி தாருங்கள்’!

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் துப்பாக்கி இருந்தால் (சொட்கன்) எமக்கும் தாருங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திகுழு கூட்டத்தில் அண்மைக்காலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சொட்கன்கள் (துப்பாக்கி) மீளப் பெறப்பட்டதால் தற்போது விவசாயிகள் வன விலங்குகளால் பெரும் துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக தெரிவித்திருந்தார்.

அத்துடன் விவசாயிகளுக்கு வனவிலங்குகளின் தாக்கம் அதிகரித்து வருவதனால் அவர்களது பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எனவே அவர்களுக்கு மீண்டும் சொட்கன் (துப்பாக்கிகள்) வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இதன்போது எவ்வாறு துப்பாக்கியை வழங்கலாம் என அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரான ரிசாட் பதியுர்தீன் பொலிஸாரிடம் கேட்டபோது அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் பெறவேண்டும் என தெரிவித்தார்.

அத்துடன் இராணுவ அதிகாரியும் குறித்த அனுமதியை இராணுவத்தினர் வழங்க முடியாது எனவும் தெரிவித்த நிலையில் வவுனியா அரசாங்க அதிபர் குறித்த விண்ணப்பம் மாவட்ட செலயத்தில் பெறப்பட வேண்டும் எனவும் அவ் விண்ணப்பத்தினை பெற்று அதற்குரிய பொறிமுறைகளின் பிரகாரம் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க முடியும் எனவும் அதன் பின்னர் அனுமதி பெற்று அதனை வழங்க நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தமக்கும் ஒரு துப்பாக்கியை தந்தால் நல்லம் என நகைச்சுவையாக தெரிவித்தார். இதன்போது அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் பழைய ஞாபகங்கள் வந்துள்ளது போல் உள்ளது என செல்வம் அடைக்கலநாதனை பார்த்து தெரிவித்திருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!