துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய அம்பாந்தோட்டை மாநகர முதல்வருக்கு சிறைத்தண்டனை

அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை, துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய, அம்பாந்தோட்டை மாநகரசபை முதல்வர் எராஜ் பெர்னான்டோவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் நாள், அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பார்வையிட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஜித் பெரேரா, அஜித் மன்னம்பெரும, நளின் பண்டார, ஏரான் விக்ரமரத்ன, ஆர்.யோகராஜன் ஆகியோரைக் கொண்ட குழு சென்றிருந்தது.

அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்த எராஜ் பெர்னான்டோ தலைமையிலான குண்டர்கள், தாக்குதல் நடத்த முற்பட்டதுடன், துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தினர்.

அவர்கள் வெளியே வந்த போது அந்தக் குழுவினர் முட்டைகள், மற்றும் கற்களையும் வீசி தாக்கியிருந்தனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, அப்போதைய அரசாங்கம், எராஜ் பெர்னான்டோ விளையாட்டுத் துப்பாக்கியையே வைத்திருந்தார் என்று கூறியிருந்தது.

எனினும், இந்த சம்பவம் தொடர்பாக அம்பாந்தோட்டை மேல்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, அம்பாந்தோட்டை மாநகர முதல்வர் எராஜ் பெர்னான்டோ, பிரேமசிறி பரனமான ஆகியோருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இதையடுத்து எராஜ் பெர்னான்டோ, சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!