கூட்டமைப்பு அரசாங்கத்தைப் பாதுகாப்பது வரவேற்கத்தக்கதல்ல :பிமல்

நல்லாட்சி அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு எதற்காக ஆதரவு வழங்கியதோ அந்த நோக்கங்கள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

அவ்வாறிருக்க இன்னமும் அரசாங்கத்தின் மீது எவ்வித விமர்சனங்களுமின்றி அநாவசியமாக கூட்டமைப்பு அரசாங்கத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் எதிர்வரும் தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதன் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் நோக்கங்களைப் பெருமளவில் அடைந்துகொள்ள முடியாது என்றே நாங்கள் கருதுகின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக தெரிவித்தார்.

தமிழ் பிரதிநிதிகள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி தமிழர் பிரச்சினைக்கு தீர்வைப்பெற முற்பட்ட அதேவேளை, அப்பிரச்சினையை நீட்டித்து அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ளவும் விரும்பினார்கள்.

தனிநாடு, தனிநிர்வாகம் என்பதை அவர்கள் ஒரு அரசியல் சுலோகமாகவே பயன்படுத்தினார்கள் என்று தமிழர் பிரதிநிதிகள் தொடர்பில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிகமானோரின் விருப்பத்துடன் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுத்தருவேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியமை தொடர்பிலும், இனிவரும் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குமாக இருந்தால் அதன் பலாபலன்கள் குறித்தும் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!