இந்தியா, சிறிலங்காவில் ஐஎஸ் அமைப்பின் தடங்கள் கண்டுபிடிப்பு

ஈராக் மற்றும் சிரியாவில் தமது செல்வாக்கு வெகுவாக குறைந்து விட்டதால், இந்தியா, சிறிலங்கா, துருக்கி, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ஐ.எஸ் பயங்கரவாதக் குழு காலடி எடுத்து வைத்துள்ளதாக, ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவைத் தளமாக கொண்டு செயற்படும், முரண்பாடுகள் , மோதல்களைக் கண்காணிக்கும் முன்னணி அமைப்பான Armed Conflict Location and Event Data (ACLED) வினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த தகவல் இடம்பெற்றுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐஎஸ் அமைப்பு மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு, மேற்கு ஆசியாவிற்கு வெளியே முதன்முறையாக அதை விட அதிகமான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் 2018 ல் அதன் நிலப்பரப்பை இழந்த ஐஎஸ் அமைப்பு, 2019 இல் உலகளாவிய இருப்பை விரிவாக்கியுள்ளதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் ஐந்து மாதங்களில், ஐஎஸ் அமைப்பு அதன் உலகளாவிய நடவடிக்கைகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் அளித்துள்ளது.

ஏப்ரல் மாதம் ஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர், ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக வெளியிட்ட காணொளியில் ஜிஹாதி தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி, பெரும்பாலும் தெற்காசியா, வடக்கு, மேற்கு மற்றும் மத்திய ஆசியாவில் ஐஎஸ் குழுவின் செயல்பாடுகளில் கவனம் செலுத்தியிருந்தார் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!