லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா விவகாரம் – அமெரிக்காவின் நிலைப்பாடே அது

சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தாம் வெளியிட்ட அறிக்கை, அமெரிக்காவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கிலானது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவர் கொழும்பில் தனது இல்லத்தில் நேற்று சில ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

இதன்போது, சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதற்கு கவலை தெரிவித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அமெரிக்க தூதுவர், பதிலளிக்கும் போது, “ இது எனது நாட்டின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது மட்டுமேயாகும்.

ஒரு நாட்டுக்கு, என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதற்கும், அதன் செயல்கள் குறித்து கவலை தெரிவிப்பதற்கும் இடையில் வித்தியாசம் உள்ளது.

அமெரிக்காவின் கொள்கைகளையும் முடிவுகளையும் பகிர்ந்து கொள்வதே எனது கடமை,” என்று அவர் கூறினார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!