நிறுத்தப்பட்ட கார்களுக்குள் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு!

அமெரிக்காவில் ஒரு மணி நேர இடைவெளியில் இரு குழந்தைகள் வெயிலில் நின்ற காருக்குள் வெப்பத்தாக்கத்தால் உயிரிழந்தன. கடந்த வெள்ளியன்று அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் லிண்டன்வேல்டு ரயில் நிலையத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் 22 மாத பெண் குழந்தை மில்லியானி வைக்கப்பட்டிருந்தது. சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக 92 பாரன்ஹீட் வெப்பத்தில் குழந்தை தனித்து விடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் மாலையில் போலீசார் குழந்தையை சடலமாக மீட்டனர்.

தந்தை சிறைபட்டிருந்ததால் உறவினரின் கண்காணிப்பில் விடப்பட்ட குழந்தையை, அலட்சியத்தால் கொன்றுவிட்டதாக தந்தை வேதனை தெரிவித்தார். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் மிஸ்ஸிசிப்பியில் பகல் நேர குழந்தைகள் காப்பக பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் இருந்த 21 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பல மணி நேரங்கள் காரில் வைக்கப்பட்டிருந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

காலையில் காரை நிறுத்தியபோதே குழந்தை இறங்கிவிட்டதாகக் கருதி காரை எடுத்துச் சென்ற பெற்றோர் மீண்டும் காரை காப்பக பார்க்கிங்கில் விட்டுவிட்டு அதே பகுதியில் வேறு பணிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுபோன்று அமெரிக்காவில் வெயிலில் நிறுத்தப்பட்ட கார்களுக்குள் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 8 மாதத்தில் 35 ஆகும். ஆகஸ்டில் மட்டும் இந்த 2 குழந்தைகளோடு சேர்த்து 10 குழந்தைகள் இதுவரை உயிரிழந்தன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!