குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சே பதிலளிக்கும் – சவேந்திர சில்வா

தன் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, இந்தக் குற்றச்சாட்டுகள் விடயத்தில் வெளிவிவகார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று கண்டியில் தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன், அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களையும் சந்தித்து ஆசி பெற்றார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

“அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் நாட்டுக்கு சேவை செய்வதில் எனது கடமையைச் செய்துள்ளேன்.

ஆனால் சில நபர்கள் என் மீது போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் விடாமுயற்சியுடன் இருக்கின்றனர்.

எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ போர்க்குற்றங்கள் தொடர்பாக என் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சே எடுக்கும்.

சிறிலங்கா இராணுவம் ஒரு நவீன இராணுவமாக முன்னேறியுள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதும், புலனாய்வு அமைப்புகளை வலுப்படுத்துவதும், முறையான திட்டத்தை செயல்படுத்துவதும் இராணுவத்தின் முக்கிய பங்காகும்.

நாட்டில் நிலவும் சூழ்நிலைகளுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் பாதுகாக்க இராணுவம் செயல்பட்டு வருகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!