யாப்பை திருத்த ஒன்றிணையுமாறு அழைப்பு!

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு, அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த நான்கரை வருடகால ஆட்சியில் நான்கு வருடங்களாக பல கோடி ரூபாய் பணத்தை செலவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியலமைப்பு வல்லுனர்கள் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கும் கற்கைகளை மேற்கொள்வதற்கும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் அதனூடாக நாட்டுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. அக்குழு வடக்கு மாகாண மக்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கிய அதேவேளை, தெற்கு வாழ் மக்களிடையே வெறுப்புணர்வை பரவச் செய்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போது ஜனாதிபதி தேர்தல் பற்றி பரவலாக பேசப்பட்டாலும் இந்த தவறைச் சரி செய்து கொள்வதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு இன்னும் காலஅவகாசம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

2020ல் ஆட்சியை கைப்பற்றும் அரசாங்கம் நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்றால் மேற்குறிப்பிட்ட முக்கிய கடமையை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென்று தெரிவித்த ஜனாதிபதி, அந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒன்று கூடுமாறு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டியதுடன், தான் அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

19வது திருத்தச் சட்டத்தினால் அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் அதிகாரமுடைய மூன்று தலைவர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரதமரின் அதிகாரத்தை அதிகரித்து சபாநாயகருக்கு மென் மேலும் அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மூன்று தலைவர்களுக்கு ஒரு நாட்டை முன்னெடுத்து செல்ல முடியாதென்றும் அதனால் நாடு சிக்கல்களுக்குள்ளாகுவதாகவும் ஜனாதிபதி மைத்திரி இதன்போது சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!