எந்த நாட்டிலும் குடியுரிமை இல்லை: காலவரையின்றி ஆவுஸ்திரேலிய சிறையில் வாடும் நாடற்றவர்கள்

ஆவுஸ்திரேலிய குடியுரிமை பெறாதவர் அல்லது அகதியாக அடையாளம் காணப்படாதவர் என அறியப்படும் நபரை நாடுகடத்தும் வரை சிறைப்படுத்தி வைக்க ஆவுஸ்திரேலிய சட்டம் அனுமதிக்கின்றது. அந்த வகையில் 45 ஆண்கள், 5 பெண்கள் உள்பட நாடற்ற 50 பேர் காலவரையின்றி ஆவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

சயித் இமாசி அதில் ஒருவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, முறையான கடவுச்சீட்டு மற்றும் விசாயின்றி ஆவுஸ்திரேலியா சென்ற அவர் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டார். எந்த நாட்டில் தான் பிறந்தேன் என்று அறியாத அவரை நாடுகடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

1980 களின் பிற்பகுதியில் கேனரி தீவுகளில் பிறந்திருக்கலாம் என எண்ணும் அவர், ஸ்பெயினில் உள்ள ஓர் ஆதரவற்றோர் காப்பகத்திலிருந்ததையே முதல் நினைவாக குறிப்பிடுகிறார். 9 வயதாக இருந்த போது அங்கிருந்து தப்பியோடிய அவர், பாரிஸிலும் பிறகு பெல்ஜியத்திலும் இருந்ததாக கூறுகிறார்.

அங்கு ஒரு வீட்டில் அடிமையாக இருந்த சூழலில் நெதர்லாந்துக்கு தப்பியுள்ளார். அங்கு ஒரு சர்வதேச குற்ற கும்பல் அவரை போதை மருந்து கடத்தவும் பணமோசடி செய்யவும் பயன்படுத்தியுள்ளது. அக்கும்பலிலிருந்து வெளியேற முயன்ற இமாசி போலியான நோர்வே கடவுச்சீட்டு மூலம் ஆவுஸ்திரேலியா வந்து நியூசிலாந்தை படகு வழியாக அடைய முயன்றிருக்கிறார். அவர் 2010 ஆம் ஆண்டில் ஆவுஸ்திரேலியா சென்ற நிலையில் போலியான ஆவணங்களில் வந்ததற்காக கைது செய்யப்பட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இமாசி வழக்கை விசாரித்த ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அவரை விடுதலை செய்யக்கோரியது. ஆனால் அவர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

இதே போன்று ஈராக்கிலிருந்து ஆவுஸ்திரேலியாவுக்கு வந்த 16 வயது அகமது ஷலிகான் தொடர்ந்து தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார். ஈராக்கில் வசித்த குர்து இனத்தைச் சேர்ந்த அவருக்கும் அவரது தாயாருக்கும் அதிகாரப்பூர்வமாக எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க இயலவில்லை. இந்த சூழலில், அவரது தாய்க்கு பாதுகாப்பு விசா வழங்கப்பட்டுள்ள போதிலும் அகமது ஷலிகான் தொடர்ந்து சிறைவைக்கப்பட்டுள்ளார். அவர் தடுப்பில் இருந்த போது செய்த சிறிய தவறை பயன்படுத்தி குணநலன் அடிப்படையில் அவர் ஆவுஸ்திரேலிய சமூகத்தில் வாழ விசா மறுக்கப்பட்டுள்ளது.

50 பேர் நாடற்றவர்கள் என்பதற்காக அவர்களை ஆவுஸ்திரேலியா காலவரையின்றி தடுப்பில் வைத்திருப்பது ஏன் என எழுப்பப்படும் கேள்விக்கு ஆவுஸ்திரேலிய உள்துறை மற்றும் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தொடர்ந்து பதலளிக்க மறுப்பதாக 7நியூஸ் என்ற ஆவுஸ்திரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!