போலந்து தம்பதியினரிடம் பொலிஸாக நடித்து மோசடி!

போலந்தைச் சேர்ந்த தம்பதியினரிடம் பொலிஸாக நடித்து மோசடி பெண் ஒருவரை, பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். அத்தோடு, குறித்த பெண் தொடர்பில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் பொலிஸார் வேண்டுக் கோள் விடுத்துள்ளனர். போலந்தைச் சேர்ந்த குறித்த அந்த தம்பதியரை, கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 1:30 அளவில் தொலைபேசி வாயிலாக அழைத்த குறித்த இனந்தெரியாத பெண், அந்தத் தம்பதியரிடம் போலந்து மொழியில் பேசியதாகவும், தன்னை ஒரு அதிகாரியாக இனங்காட்டிக்கொண்ட அந்தப் பெண், குற்றக் குழு ஒன்றைக் கைது செய்வதற்கான சட்ட நடவடிக்கைக்காக ஒரு தொகைப் பணத்தினையும் நகைகளையும் ஒரு பையில் போட்டு வீட்டின் வெளியே வைக்குமாறு கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அந்த தம்பதியரும் அவ்வாறே செய்ததாகவும், எனினும் சிறிது நேரத்தில் அந்தப் பை திருடிச் செல்லப்பட்டதை அவர்கள் உணர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் பொதுப் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ரொறன்ரோ பொலிஸார், அதிகாரிகள் ஒருபோதும் இவ்வாறு தொலைபேசி வாயிலாக பெறுமதியான பொருட்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளனர்.

இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், இது தொடர்பாக தகவல் அறிந்தோர் தம்மை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!