துப்பாக்கியை காண்பித்து மிரட்டி சவுதி இளவரசியின் பாதத்தில் முத்தமிடும் படி பணித்த மெய்ப்பாதுகாவலர்கள்- நடந்தது என்ன- நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

தொழிலாளியொருவரை மோசமாக தாக்கி அவமானப்படுத்துமாறு தனது மெய்ப்பாதுகாப்பாளர்களிற்கு உத்தரவிட்டார் என்ற குற்றச்சாட்டிற்குள்ளான சவுதிஅரேபிய இளவரசி ஹசா பின்ட் சல்மான் அல் சவுடடிற்கு பிரான்ஸ் நீதிமன்றம் பத்துமாதம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.

பிரான்ஸ் தலைநகரில் இடம்பெற்ற இந்த சம்பவத்திற்காகவே நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

2016 செப்டம்பரில் பாரிஸில் உள்ள ஆடம்பர தொடர்மாடியில் நான் பணிபுரிந்துகொண்டிருந்த வேளை சவுதி இளவரசி தன்னை நான் படம்பிடித்து விட்டதாக தெரிவித்து தனது மெய்ப்பாதுகாவலர்களை என்னை தாக்குமாறு உத்தரவிட்டார் என அஸ்ரவ் எய்ட் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணை செய்த பின்னரே நீதிமன்றம் இந்த தண்டனையை அறிவித்துள்ளது.

நான் பாரிசில் சவுதிமன்னர் குடும்பத்தின் ஆடம்பர தொடர்மாடியில் திருத்தவேளைகளில் ஈடுபட்டிருந்தவேளை கழிவறையில் காணப்பட்ட தளபாடங்களை தொழில்தேவைக்காக படமெடுத்தேன்,அவ்வேளையில் கண்ணாடியில் இளவரசியின் முகத்தை பார்த்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் என்னை தாக்குமாறு தனது மெய்ப்பாதுகாவலர்களிற்கு உத்தரவிட்ட இளவரசி எனது கையடக்க தொலைபேசியை பறிக்குமாறு உத்தரவிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் நாய்கள் -உங்களிற்கு இளவரசியுடன் எவ்வாறு பேசுவது அரசகுடும்பத்துடன் எவ்வாறு பேசுவது என கற்றுத்தரவேண்டும் என இளவரசி தெரிவித்தார் எனவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

இளவரசின் மெய்ப்பாதுகாவலர்கள் என்னை தாக்கினார்கள் கைகளை பின்னால் கட்டிய பின்னர் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி இளவரசியின் பாதத்தில் முத்தமிடும் படி பணித்தனர் என பாதிக்கப்பட்ட நபர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

எனது தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியவர்கள் இளவரசியின் காலில் விழுந்து முத்தமிடு அல்லது தாக்கப்படுவாய் என எச்சரித்திருந்தனர் எனவும் பாதிக்கப்பட்டவர் முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து எய்ட் காவல்துறையினரிடம் முறையிட்டதை தொடர்ந்து அவர்கள் இளவரசியிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்

இந்த விசாரணைகள் இடம்பெற்று இரு நாட்களின் பின்னூ இளவரசி பிரான்சிலிருந்து வெளியேறியிருந்தார்.

இதன் பின்னர் இந்த வழக்கை விசாரணை செய்தவர்கள் இளவரசியை தொடர்புகொள்ள முடியாமலிருப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து நீதிமன்றம் சர்வதேச பிடியாணையை பிறப்பித்திருந்தது

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நம்பமுடியாமல் உள்ளது தீர்ப்பு சீற்றமளிக்கின்றது தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்து இளவரசி குற்றமற்றவர் என்பதை நிரூபிப்போம் என அவரின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!