பலாலி விமான நிலைய விரிவாக்க பணிகளை ஒக்ரோபர் 10இற்குள் முடிக்க உத்தரவு

சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ள, பலாலி விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள், வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக, நெடுஞ்சாலை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

பலாலி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப் பணிகளை நேற்று பார்வையிட்ட பின்னரே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பலாலி விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை, தமக்கு வழங்கப்பட்ட 70 வீத பணிகளை நிறைவு செய்துள்ளது.

விமான நிலையத்துக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வரும், விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தமது பணிகளில் 55 வீதத்தை நிறைவு செய்திருக்கிறது.

வரும் ஒக்ரோபர் 16 அல்லது அதனை அண்டிய நாளில் பலாலி விமான நிலையத்தில் இருந்து, அனைத்துலக விமான சேவைகளை ஆரம்பிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

எனவே, எனவே ஒக்ரோபர் 10 ஆம் நாளுக்கு முன்னர் , கட்டுமானப் பணிகளை முடிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!