அதிபர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து ரணில் ஆலோசனை

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆர்வத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐதேக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளருக்கு ஜேவிபி உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் ஆதரவை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று சிவில் அமைப்புகளின் செயற்பாட்டார்கள் குழுவுடன் நடத்திய சந்திப்பின் போதே ரணில் விக்ரமசிங்க இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் வண. தம்பர அமில தேரர், கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர, கலாநிதி ஜெகான் பெரேரா, குமுதினி சாமுவல்ஸ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

ஜேவிபியின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது குறித்தும், ஒரு கட்டத்தில் வேறு பாதைக்குச் சென்ற ஐதேகவினரின் ஆதரவை பெறுவது குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தேர்தலுக்கான உத்திகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எனினும், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்துவது குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்படவில்லை என்று கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!