ரணிலா – சஜித்தா? – இரகசிய வாக்கெடுப்பு நடத்த கோருகிறார் சம்பிக்க

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று, அதன் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, இதுகுறித்து கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையில்,

“ஐதேகவின் அதிபர் வேட்பாளரை தெரிவு செய்வதில் இனிமேலும் தாமதம் ஏற்படக் கூடாது.

அதிபர் வேட்பாளராக போட்டியிட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவும் ஆர்வம் கொண்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர், அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள 106 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும்.

அதிபர் வேட்பாளரை உள்ளக நடைமுறைகளின் மூலம் தெரிவு செய்வதற்கு ஐதேகவுக்கு காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதனை அவர்கள் தாமதித்துள்ளனர்.

இனிமேலும் ஏற்படும் தாமதங்கள், ஐக்கிய தேசிய முன்னணி ஆதரவாளர்களுக்கு அநீதியாக அமையும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!