பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? – அமரவீர விளக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் ஒருவரை நியமிப்பது பொருத்தமானது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறிய விடயத்தை கவனத்தில் கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் ஏற்கனவே தீர்மானித்துள்ளதன் படி சுதந்திர கட்சி சார்பில் வேட்பாளரொருவர் களமிறக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது ஐக்கிய தேசிய கட்சி தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக 3000 மில்லியனுக்கும் அதிக அரச நிதியை செலவிட்டுள்ளது. இதனால் அரச அதிகாரிகளுக்கு மாதாந்த சம்பளத்தை வழங்க முடியாத நிலைமை கூட ஏற்பட்டுள்ளது. எனவே இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு பொறுப்பு காணப்படுகிறது. எனவே அவர் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றோம்.

மேலும் பாதாள உலகக் குழுவினர் கூட தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் , பொலிஸ் மற்றும் ஏனைய பாதுகாப்பு பிரிவினர் இந்த விடயம் குறித்தும் ஆராய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!