புதன்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது ஐதேக?

அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் 25ஆம் நாள்- புதன்கிழமை அறிவிக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, நேற்று தொடக்கம் வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை செலுத்தி வரும் நிலையில், ஐதேக இன்னமும் தமது வேட்பாளரின் பெயரை அறிவிக்கவில்லை.

இந்தநிலையில், வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும், ஐதேக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், நாடு திரும்புமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை வேட்பாளரை தெரிவு செய்வதற்கே அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

அதேவேளை, பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன், கூட்டணி மற்றும் அதன் சின்னம் தொடர்பாகவும் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதற்கிடையே ஐதேக இனிமேலும் தாமதிக்காமல், விரைவில் தமது வேட்பாளரின் பெயரை அறிவிக்க வேண்டும் என்று சிவில் சமூக அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.

ஐதேக யாப்பின் 91 ஆவது பிரிவுக்கு அமைய, கட்சியின் செயற்குழுவே வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும் என்றும், ஏற்கனவே ரணசிங்க பிரேமதாச, காமினி திசநாயக்க, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அவ்வாறே செயற்குழுவினால் வேட்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர் என்று, ஐதேகவில் ஒரு பிரிவினர் வாதிட்டு வருகின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!