குற்றங்களின் பின்னணியில் அரசியல்வாதிகளே உள்ளனர் : அனுரகுமார

இந் நாட்டில் இடம்பெறும் மிகப்பெரிய குற்றங்கள் அனைத்தின் பின்னணியிலும் அரசியல்வாதிகளே உள்ளனர். ரணில் ஆட்சிக்கு வந்தால் பிணைமுறி ஊழலும், மஹிந்த ஆட்சிக்கு வந்தால் தாமரை கோபுர ஊழலும் நினைவுக்கு வருகின்றது.

ஏனைய கள்ளர்களை தண்டிக்க முன்னர் பாரிய கள்ளர்கள் இருவரையும் தண்டிக்க வேண்டும் என்கிறார் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக.

தேசிய மக்கள் சக்தி இயக்கத்தால் ஏற்பாடு செய்திருந்த விவசாய மாநாட்டில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திசாநாயக மேலும் கூறுகையில்,

இந்த நாட்டில் சிறந்த பொலிஸ் துறையினர் உள்ளனர். குற்றங்களை விரைவாக கண்டறியக் கூடிய திறமை அவர்களிடம் உள்ளது. கிராமங்களில் நகரங்களில் ஏதேனும் ஒரு குற்றம் நடந்தால் வெகு விரைவில் அதனை கண்டறியக்கூடிய திறமை அவர்களிடம் உள்ளது.

எனினும் இந்த நாட்டில் கண்டறிய முடியாத, யார் குற்றவாளிகள் என வெளிப்படுத்த முடியாத மிகப்பெரிய குற்றங்கள் இடம்பெறுகின்றன.

அவை அனைத்தின் பின்னணியிலும் அரசாங்கமே உள்ளது. பிரதானமாக குடு போதைப்பொருள் கடத்தல் அனைத்தின் பின்னணியிலு அரசியல் பின்னணி உள்ளது.

இந்த நாட்டில் குடு உற்பத்தி செய்யமுடியாது. வெளிநாடுகளில் இருந்து வருவதென்றால் ஒன்று விமானங்களில் அல்லது கப்பல்களில் தான் வரவேண்டும்.

இவ்வாறு வரும் போதைப்பொருட்களை கடத்தும் பின்னணியில் அரசியல்வாதிகள் மட்டுமே உள்ளனர் என அவர் இதன்போது தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!