சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன விரைவில் இணையும் : ரஞ்சித் சியம்பலாபிட்டி

ஐக்கிய தேசிய கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தார். இருவருக்குமிடையில் அன்று காணப்பட்ட அதே புரிந்துணர்வு இன்றும் இருக்கிறது.

எனவே சுதநதிர கட்சி – பொதுஜன பெரமுன விரைவில் இணையும் என்று சுதந்திர கட்சியின் பிரசார செயலாளர் ரஞ்சித் சியம்பலாபிட்டி தெரிவித்தார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வரலாற்றில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முற்போக்கான கொள்ளைகைகளுடனேயே செயற்பட்டு வந்திருக்கிறது.

எதிர்காலத்திலும் அதே போன்று தான் செயற்படும். கடந்த 2015 ஆம் ஆண்டு நாட்டின் சிறந்ததொரு எதிர்காலத்திற்காக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. எனினும் ஐ.தே.க அவற்றை மறந்து மாற்று வழியில் செயற்பட ஆரம்பித்தது.

எனவே தான் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். எனினும் நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட விடயங்களால் அவ்வாறு இணைந்து தொடர்ந்தும் செயற்பட முடியாமல் போனது.

எனினும் அன்றைய தினம் ஒரு புரிதலுடனேயே அவ்வாறு இடம்பெற்றது. தற்போதும் இவ்விரு தலைவர்களுக்கிடையிலும் அந்த புரிதல் இருக்கிறது. எனவே பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திர கட்சி என்பன விரைவில் இணையும் என்ற நம்பிக்கை இருக்கிறது என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!