நீதிபதியை மாற்றக் கோரிய பசிலின் மனு நிராகரிப்பு

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் தனக்கு எதிரான திவிநெகும விவகார வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என கோரி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பசிலின் மேன்முறையீட்டு மனுவில் எவ்வித சட்டப்பூர்வ தன்மையும் இல்லை என கூறி நீதிபதிகள் அதனை நிராகரித்து உத்தரவிட்டனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இரண்டு கோடியே 94 இலட்சம் ரூபா நிதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிழற்படம் அடங்கிய 50 இலட்சம் நாட்காட்டிகளை அச்சிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பசில் ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!