சஜித் வேட்பாளரானதால் ஐதேமுவில் இருந்து வெளியேறியது ஜயம்பதியின் கட்சி

????????????????????????????????????
சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக நிறுத்த ஐதேக முடிவெடுத்துள்ளதை அடுத்து, ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து விலக, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவின் தலைமையிலான ஐக்கிய இடதுசாரி முன்னணி முடிவு செய்துள்ளது.

அத்துடன், வரும் அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமைப்பின் வேட்பாளராக களமிறங்கும், அனுரகுமார திசநாயக்கவுக்கு ஆதரவளிக்கவும், ஐக்கிய இடதுசாரி முன்னணி தீர்மானித்துள்ளது.

மிகஉயர்ந்த பதவியை வகிக்கும் அளவுக்கு, அரசியல் ரீதியாக, சஜித் பிரேமதாச உண்மையில் முதிர்ச்சியடையவில்லை.” என்று ஐக்கிய இடதுசாரி முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

“தேர்தலில் சஜித் பிரேமதாசவை நிறுத்த முடிவெடுக்கப்பட்ட அன்றே ஐதேமுவில் இருந்து விலக முடிவெடுத்து விட்டோம்.” என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவைத் தோற்கடிக்கக் கூடிய பலமான வேட்பாளருக்கு ஆதரவை வழங்குமாறும் மக்களிடம் கோர முடிவு செய்துள்ளதாக கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இடதுசாரி முன்னணியின் நிறைவேற்றுக் குழுவின் 27 உறப்பினர்கள், ஐதேமுவில் இருந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்றும், ஏனைய மூவரும் எதிர்ப்புத் தெரிவித்தனர் என்றும் லால் விஜேநாயக்க கூறினார்.

தேசிய மக்கள் சக்தி இயக்கத்துடன் தமது கட்சி விரைவில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கைச்சாத்திடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

”நாங்கள் அறிமுகப்படுத்த முயன்ற சில அரசியல் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், இந்த கட்டத்திற்கு அப்பால் நாம் ஐக்கிய தேசிய முன்னணி மீது நம்பிக்கையை வைத்திருக்க முடியாது.

அதிபர் வேட்பாளராக சஜித் பிரேமதாசாவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நாட்டை இப்போது இருக்கும் இடத்திலிருந்து எம்மால், முன்னோக்கி நகர்த்த முடியும் என்பதை எங்களால் ஏற்க முடியவில்லை. எனவே, நாங்கள் ஐக்கிய தேசிய முன்னணியை விட்டு வெளியேற முடிவு செய்தோம்.

சஜித் பிரேமதாசவிடம், வடக்கு மற்றும் கிழக்கிற்கான அதிகாரப் பகிர்வு, தேசிய நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பின் திருத்தங்கள் தொடர்பான கொள்கைகள் இல்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!