ரணிலின் அரசியல் திட்டம் இம்முறை வெற்றிப்பெறாது : மஹிந்த

ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையில் மாற்றமில்லை. நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சியமைத்த மைத்திரி- ரணில் ஆகியோரது நிர்வாகத்தையே மீண்டும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஊடாக செயறபடுத்திக் கொள்ள பிரதமர் ரணில் முயற்சிக்கின்றார்.

பிரதமரின் அரசியல் திட்டம் இம்முறை வெற்றிப்பெறாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள கண்காட்சி காட்சிப்படுத்தல் அரங்கில் இன்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாரிய போராட்டத்திற்கு பிறகு ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளது.

கட்சி ரீதியில் விரைவாக ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளமை தொடர்பில் அக்கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நல்லாட்சி என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

கடந்த நான்கு வருட காலமாக அரசாங்கம் தேசிய வளங்களை பிற நாட்டுக்கு விற்பதற்கும், அரசியல் பழிவாங்களுக்க காலத்தை செலவிடுவதிலே கவனம் செலுத்தியது. பெயரளவிலே மக்களுக்கு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. மறுபுறம் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள் வீதிக்கு இறங்கி போராட வேண்டிய நிலை ஏறபட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால் மக்கள் நிச்சயம் அவரை புறக்கணிப்பார்கள்.

அதன் காரணமாகவே அவர் பொதுவேட்பாளர் ஊடாக பிரதமர் பதவியை தனதாக்கி கொள்ள முயற்சிகளை ஆரம்பத்தில் இருந்து மேற்கொண்டு வெற்றியும் பெற்றார் என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!