17 ஆண்டுகள் குகையில் வாழ்ந்த குற்றவாளியை கண்டுப்பிடித்த ட்ரோன்

சீனாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பியோடி, தனியே குகையில் வசித்து வந்த நபரை ட்ரோன் உதவி கொண்டு அந்நாட்டு பொலிஸார் பிடித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் 63 வயதாகும் சாங் ஜியாங், 2002இல் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

மனிதர்களின் நடமாட்டமே இல்லாத இடத்தில் பல ஆண்டுகளாக சிறிய குகையில் இவர் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

சாங்கின் இருப்பிடம் குறித்த ஆரம்பகட்ட தகவல்கள் செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் கிடைத்ததாக யோங்க்ஷன் காவல்துறையினர் தங்களது ‘வீ சாட்’ சமூக வலைதளக் கணக்கில் தெரிவித்துள்ளனர்.

அதை அடிப்படையாக கொண்டு சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள யுன்னான் மாகாணத்தை பூர்விகமாக கொண்ட சாங்கின் வீட்டிற்கு அருகிலுள்ள மலைகளில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

வழக்கமான தேடுதல் முயற்சிகள் பலனளிக்காததை தொடர்ந்து, இப்பணியில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உதவும் பணியில் ட்ரோன்கள் ஈடுபடுத்தப்பட்டன.

அப்போது, சிறிதும் எதிர்பார்க்காத வகையில் நீல நிறத்திலான கூரை ஒன்று மலையின் சரிவில் இருப்பது கண்டறியப்பட்டது. அதுமட்டுமின்றி, அங்கு மனிதர்கள் வாழ்வதை உறுதிப்படுத்தும் வகையிலான வீட்டு கழிவுப்பொருட்களும் அருகிலுள்ள இடத்தில் கண்டறியப்பட்டது.

சாங் பல ஆண்டுகளுக்கு மனிதர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இந்த பகுதியில் தனித்து வசித்து வந்ததால் அவரை எளிதில் கண்டறிய முடியவில்லை என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சாங், 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!