நாட்டு நிலவரம் பற்றியே சஜித்துடன் பேசினார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐதேக குழுவினர் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தே கலந்துரையாடினர் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நேற்றுமுன்தினம் இரவு 9.45 மணியளவில், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐதேக குழுவினர் சந்தித்தனர். சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதில், தயாசிறி ஜயசேகர, மகிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன ஆகியோரும் சிறிலங்கா அதிபருடன் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசசேகர, நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது என்றும் மாத்திரம் தெரிவித்தார்.

மேலதிக விபரங்களை வெளியிட அவர் மறுத்துள்ளார்.

அதேவேளை சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் வீரகுமார திசநாயக்க, எந்த விவகாரம் குறித்தும் எந்த அரசியல் கட்சியுடனும் பேசுவதற்கு சுதந்திரக் கட்சி தயாராக இருக்கிறது என்றும், ஐதேக பொதுச்செயலரின் கோரிக்கைக்கு அமையவே, சஜித் பிரேமதாசவை சிறிலங்கா அதிபர் சந்தித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட நடப்பு விவகாரங்கள் குறித்தே இதன்போது கலந்துரையாடப்பட்டது என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, ஐதேக- சுதந்திரக் கட்சி கூட்டணிக்கான வாய்ப்புகளையும் அவர் நிராகரிக்க மறுத்து விட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!