புதிய அரசியலமைப்பை வரைய நிபுணர் குழுவுக்கு ஒரு மாத காலஅவகாசம்

புதிய அரசியலமைப்புக்கான வரைவை ஒரு மாத காலத்துக்குள் தயாரித்து தருமாறு, நிபுணர் குழுவிடம் வழிநடத்தல் குழு கேட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழு ஆறு மாதங்களுக்குப் பின்னர் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கூடியது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், சுமார் 40 நிமிடங்கள் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில், வழிநடத்தல் குழுவின். பெரும்பாலான உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

2016ஆம் ஆண்டு வழிநடத்தல் குழு உருவாக்கப்பட்ட பின்னர், நடத்தப்பட்ட 76 ஆவது கூட்டம் இதுவாகும்.

இந்தக் கூட்டத்தில், 10 பேர் கொண்ட நிபுணர் குழு, புதிய அரசியலமைப்புக்கான வரைவைத் தயாரிப்பதற்கு, மேலும் நான்கு வார காலஅவகாசத்தை வழங்குவதற்கு, வழிநடத்தல் குழு முடிவு செய்துள்ளது.

புதிய வரைவில், பல்வேறு அரசியல் கட்சிகளாலும் முன்வைக்கப்பட்ட மாற்று யோசனைகளையும் உள்ளடக்குமாறும் நிபுணர் குழு கேட்கப்பட்டுள்ளது,

புதிய அரசியலமைப்பு வரைவு தயாரானதும், ஜூன் மாத பிற்பகுதியில், வழிநடத்தல் குழுவின் அடுத்த கூட்டத்தைக் கூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.